சர்வதேச அளவில் ஐபோன் உற்பத்திக்கான மையமாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு… இதற்காக மத்திய அரசு எடுத்த முயற்சியின் பலனாக, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது சந்தையை விரிவுபடுத்தி வருகிறது.. ஆனால், அதற்கு ஆரம்ப காலம் முதலே முட்டுக்கட்டை போட்டு வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்…
அண்மையில் கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த வணிகக் கூட்டத்தில் பங்கேற்ற டிரம்ப், இந்தியாவில் ஐ-போன்களை தயாரித்து, அமெரிக்காவில் விற்பனை செய்வது இந்தியாவுக்கே பலனளிக்கும் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். இந்தியாவுக்கு உதவ விரும்பினால் பரவாயில்லை என்று குறிப்பிட்டிருந்த டிரம்ப், இந்தியாவில் தயாரிப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்திருந்தார்…
ஆனால், டிரம்ப்பின் பேச்சை ஒதுக்கித் தள்ளிய ஆப்பிள் நிறுவன CEO, இந்தியாவில் முதலீடு செய்வதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தனது கருத்தை பதிவு செய்திருந்தார். இந்தியாவில் கடந்த நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனம் 79 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியதே அதற்குக் காரணம்… இது 2024ம் ஆண்டின் 3ம் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் கணித்ததை விட வலுவான வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது…
இந்நிலையில்தான், வெள்ளை மாளிகையில், பெரிய தொழில்நுட்ப நிறுவன ஜாம்பவான்களுக்கு விருந்தளித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
ஆப்பிள் தலைமை நிர்வாக இயக்குநர் டிம் குக், கூகுள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்பிச்சை, மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா போன்ற தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகள் பலர் பங்கேற்றிருந்தனர்.
விருந்துக்கு பின் வேட்டு வைக்கும் வகையில் தொழில்நுட்ப நிறுவனங்களை நோக்கி நேரடியாக அமெரிக்காவில் எவ்வளவு முதலீடு செய்வீர்கள் என்ற கேள்வியை முன் வைத்தார் டிரம்ப்…. குறிப்பாக ஆப்பிள் நிறுவன CEO-விடம் அமெரிக்காவில் நீங்கள் எவ்வளவு முதலீடு செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவன திட்டங்கள் ஏற்கெனவே டிரம்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்வதாக டிம் குக் தெரிவித்தார். மேலும் அமெரிக்காவில் பெரிய முதலீட்டை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தியதற்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
இதேபோன்று மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களிடம் வரிசையாக கேள்வி எழுப்பி, இந்தியா மீதான வரி விதிப்புக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், அமெரிக்காவில் முதலீட்டை ஈர்ப்பதற்கும், சலுகைகளை வழங்குவதற்கும் தயாராகி வருகிறார் டிரம்ப்… அதன் விளைவாகவே தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விருந்து வைத்து கறார் காட்டியிருக்கிறார் என்ற விமர்சனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன…