இந்தாண்டின் கடைசி சந்திர கிரகணம் சுமார் 85 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. இதனை நாடு முழுவதும் ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.
இந்தியாவில் கடைசியாக 2022ம் ஆண்டு முழு சந்திர கிரகணம் தெரிந்தது. அதனை தொடர்ந்து 3 ஆண்டுகள் கழித்து நேற்றிரவு முழு சந்திர கிரகணம் தோன்றியது. இரவு 9.57 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.27 மணி வரை நீடித்தது. இரவு 11.42 மணி முதல் 12.33 மணி வரை நீடித்த முழு சந்திர கிரகணத்தின்போது, நிலவு அடர் சிவப்பு நிறத்தில் தென்பட்டது. எனவே, இது Blood Moon எனவும் அழைக்கப்படுகிறது. அடுத்ததாக 2028ம் ஆண்டுதான் அடுத்த முழு சந்திர கிரகணம் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திர கிரகணத்தை துல்லியமாக காணும் வகையில், சென்னையின் பல பகுதிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிர்லா கோளரங்கம், அண்ணா பல்கலைக்கழக வளாகம், திருவான்மியூர் கடற்கரை, எண்ணூர் கடற்கரை, விருகம்பாக்கம், கோவூர், நாவலூர் உள்ளிட்ட 10 இடங்களில் தொலைநோக்கிகள் மூலம் மக்கள் சந்திர கிரகணத்தை கண்டு ரசித்தனர்.
அதோபோல், இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கிரகணத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ உள்ளிட்ட அனைத்து முக்கிய பகுதிகளிலும் திரளான மக்கள் குடும்பத்துடன் தொலைநோக்கி வாயிலாக சந்திர கிரகணத்தை கண்டு ரசித்தனர்.
சந்திர கிரகணத்தின்போது பெரும்பாலான கோயில்கள் மூடப்பட்டிருந்த நிலையில், சில கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களும் சிறப்பு வழிபாடு நடத்தினர். குறிப்பாக, வாரணாசியில் உள்ள பக்தர்கள் நள்ளிரவில் கங்கை நதியில் புனித நீராடி வழிபட்டனர்.
ராமேஸ்வரத்தில் சந்திர கிரகணத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அக்னி தீர்த்த கடற்கரையில், சந்திரனுக்கு தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தப்பட்டது.