கடலுக்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்த 8500 ஆண்டுகள் பழமையான நகரத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த நகரம் எங்கு இருக்கிறது. எப்படி மூழ்கடிகப்பட்டது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் வளைகுடாவில், மூழ்கிக் கிடக்கும் ஒரு பழமையான நகரத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள் ஆய்வாளர்கள்.
பனிகாலம் முடிந்து கடல் நீர் மட்டம் உயரும் என்பதால், இந்த நகரம் கடலுக்குள் மூழ்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். Stone Age Atlantis என அழைக்கப்படும், இந்த நகரத்தில் கல்லால் ஆன கருவிகள், விலங்குகளின் எலும்புகள், மரக் கருவிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடலுக்கு அடியில் 430 சதுர அடி கொண்ட பரப்பளவை ஆய்வாளர்கள், ஆய்வுக்கு உட்படுத்தினர். கடலுக்கு அடியில் ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால், 8500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எவ்விதச் சேதமும் இன்றி அப்படியே மீட்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கற்கால மனிதர்களின் வாழ்க்கையை இந்நகரம் பிரதிபலிப்பதாகவும், அன்றைய கால வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களை எடுத்துக் காட்டும் வகையிலும் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வடக்கு ஐரோப்பிய கடற்கரை பகுதிகளில் மூழ்கிய கற்கால நகரங்களைக் கண்டறியும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆறாண்டு கால திட்டத்தின் ஒருபகுதியான இத்திட்டத்திற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அண்டர் வாக்யூம் கருவிகளைப் பயன்படுத்தி கடலுக்குள் 26 அடி ஆழம் வரை சென்று, இந்நகரத்தைக் கண்டறிந்த ஆய்வாளர்கள், பழங்கால பொருட்களையும் சேகரித்துள்ளனர். இந்நகரத்தில், மீன்பிடி கருவிகள், ஈட்டிகள் போன்றவை இன்னும் கடலுக்கு அடியில் மறைந்திருக்கக் கூடும் என்று கூறும் ஆய்வாளர்கள், ஆய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வு கடலோரத்தில் கற்கால மனிதர்களின் வாழ்க்கை முறை, மீன்பிடித் தொழில் போன்றவற்றை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடலில் நீர்மட்டம் உயர்வது போன்ற சுற்றுச்சூழல் மாற்றங்களின்போது, கற்கால மனிதர்கள் தங்களை எப்படிக் காலநிலையுடன் பொருத்திக் கொண்டார்கள் என்பதையும், காலநிலை மாற்றத்திற்குத் தீர்வு காணவும் உதவும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை.