41 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் காந்தப்புலம் சீர்குலைந்தது போல் மீண்டும் ஒரு சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அது என்ன காந்தபுலம்…? அதனால் மனிதக் குலத்திற்கு என்ன ஆபத்து என்பதை தற்போது பார்க்கலாம்.
சூரியனின் கதிரியக்கத்தில் இருந்து பூமியில் வாழும் உயிரினங்களை காக்கவும், நமது கிரகத்தின் துடிக்கும் இதயமாகவும் இருப்பதே இந்தக் காந்தப்புலம்தான். திசைக் காட்டிகள் போன்றவற்றுக்கு வழிகாட்டும் முக்கிய கருவியாகவும் காந்தப்புலம் செயல்படுகிறது.
அவ்வளவு முக்கியத்துவம் கொண்ட பூமியின் காந்தப்புலம் தற்போது பலவீனமடைந்து வருவதாகச் செயற்கைக்கோள் தரவுகள் தெரிவிக்கின்றன. Science Advances வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கை, Laschamps Excursion என்று அழைக்கப்படும் பூமியின் காந்தப்புலத்தின் தற்காலிகச் சரிவு, ஆதிகால மனிதர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறுகிறது.
41 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் காந்தத் துருவங்கள் (Earth’s magnetic poles) கணிக்க முடியாத வகையில் செயல்பட்டதாகவும், விண்வெளியில் லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும், சம்பவத்தால் காந்தப்புலம் தேங்காய் சிதறுவது போல் தனித்தனி துருவங்களாகத் துண்டு துண்டாகப் பிரிந்தது எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகத் தனது பலத்தில் 10 சதவிகிதத்தைக் காந்தப்புலம் இழந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
லாசாம்ப்ஸ் நிகழ்வின் போது, பாதுகாப்பு கவசமாக இருந்த காந்தப்புலம் பலவீனமடைந்ததால், பூமியின் மேற்பரப்பு அதிகளவிலான புறஊதா கதிர்களைப் புவிக்கு திருப்பியது. இது காலநிலையை சீர்குலைத்து, உயிரியல் அமைப்புகளை வெகுவாகப் பாதித்திருக்கலாம் என்றும், துருவப் பகுதிகளில் மட்டுமன்றி, மத்திய மற்றும் பூமத்திய ரேகை, அட்சரேகைகளில் பல வண்ணங்களைப் பிரதிபலிக்கும் auroras தோன்றியிருக்கும் என்றும் கணித்திருக்கிறார்கள்.
இந்த auroras, வானத்தை, மனிதர்களையும், விலங்குகளையும் மயக்கும் ஆபத்தான காட்சியாக மாற்றியிருக்கக் கூடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காந்த மண்டலத்தின் முறிவு அல்லது சரிவு, வளிமண்டலத்தில் வேதியியலை மாற்றியமைத்து, ஓசோன் படலத்தைப் பலவீனப்படுத்தியிருக்கும் என்றும், மரபணு மாற்றங்கள், தோல் புற்றுநோய்கள் மற்றும் பிறப்பு குறைபாடுகளை அதிகரித்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இது பூமியைக் கடுமையானதாகவும், கணிக்க முடியாததாகவும் மாற்றியிருக்கிலாம் என்றும் கூறுகின்றனர்.
காந்தப்புலம் பலவீனம் ஐரோப்பாவில் கடுமையாக இருந்ததை, தொல்பொருள் கண்டுபிடிப்புகளும், குகை வாழ்விடங்கள் அதிகரித்ததும் கோடிட்டுக் காட்டுகின்றன.. இது ஆதிகால மனிதர்கள் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து தப்பிக்கக் குகைகளை முதன்மை வாழ்விடங்களாகப் பயன்படுத்தியதை காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
எலும்புக் கருவிகள், உடை வடிவங்களிலிருந்து கிடைத்த சான்றுகள், ஐரோப்பா, மேற்கு ஆசியாவில் வாழ்ந்த Neanderthals மற்றும் Homo sapiens மனிதர்கள் பயன்படுத்திய அதிநவீன ஆடைகள், இரும்புச்சத்து நிறைந்த கனிம நிறமியான காவியின் பயன்பாடு போன்றவை அந்தக் கால கட்டத்தில் கதிர்வீச்சின் அபாயத்தை குறைத்ததாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
காந்தப்புலம் சரிவு, நியாண்டர்தால் மனிதர்களின் அழிவு போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு இடையே நேரடித் தொடர்பு இருப்பதாகக் காட்டினாலும், ஆய்வாளர்கள் அவற்றை மறுத்துள்ளனர்.
கடந்த காலங்களைப் போன்று அல்லாமல், நவீன நாகரிகம் செயற்கைக்கோள், விமான போக்குவரத்து மின் கட்டமைப்பு, ஜிபிஎஸ் தொழில்நுட்பம் போன்றவற்றைச் சார்த்திருக்கிறது. இவை அனைத்தும் சூரிய கதிர்வீச்சால் பாதிக்கப்படக் கூடியவையே. இயற்கைக்கு மாறான செயல்பாடு பருவநிலையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்திருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
அதேபோன்று வானில் நிலவும் நிகழ்வுகள், காந்தபுலத்தைப் பாதிக்குமாயின், பூமி அழிந்து, பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தனது காந்தப் புலத்தை இழந்த செவ்வாயைப் போன்று வறண்டு போய்விடும் என்பதே விஞ்ஞானிகளின் கூற்றாக உள்ளது. தற்போதைய சூழலிலும் காந்தப்புலம் பலவீனமடைந்து வருவதாகக் கிடைத்திருக்கும் தரவுகள், மனிதக் குலத்திற்கு எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது.