கூட்டணியில் இருந்து விலகத் தாம் தான் காரணம் என்று டிடிவி தினகரன் கூறுவது ஏன் எனத் தெரியவில்லை எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசியவர்
அகில இந்தியத் தலைமை என்ன கூறுகிறதோ, அதைத்தான் நான் கேட்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதிமுக கட்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதைத் தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இது தொடர்பாகப் பல தலைவர்களிடம் நான் பேசியுள்ளேன். தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது. திமுகவுக்கு மாற்றான அரசு அமைய வேண்டும். இதற்காக அதிமுக கட்சி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், “டெல்லி தலைமையோடு பேசி அனைவரையும் ஒன்றிணைக்க ஒரு முடிவு எடுக்கப்படும். தோல்வியே பிறருக்குக் கொடுத்து வளர்ந்தவர்கள் நாங்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரப் போல. அதுபோல வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குத் தோல்வியைத் வழங்குவோம்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று சந்திரக் கிரகணம் நிகழ்ந்ததைக் குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், “அதேபோல தமிழக அரசியலிலும் நிறைய கிரகணங்கள் நடந்து கொண்டிருக்கிறது” என்றார். 2001-ல் நடந்த தேர்தலில் என் போன்றவர்கள் மேலே வந்ததில் டிடிவி தினகரனுக்கு முக்கிய பங்கு உண்டு என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகியதற்குக் காரணம் நயினார் நாகேந்திரன் தான் என்றும், அவர் அகங்காரத்துடன் செயல்படுகிறார் என்றும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணா திமுக – பாஜக ஒரு கூட்டணியாக இருந்தது. இப்பொழுது டிடிவி தினகரன் கூட்டணியில் இல்லை. பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு தனிக்கட்சி ஆரம்பித்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலிலும் அண்ணா திமுகவோடு பாரதிய ஜனதா கட்சி கூட்டணியோடு இருந்து 65 இடங்களில் போட்டியிட்டு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றோம். பாட்டாளி மக்கள் கட்சியும் சில சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது. தொடர்ந்து எங்களோடு இருப்பார்கள் என்று பலமுறைக் கூறியிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும், “பலமுறை டிடிவி தினகரனோடு தொலைபேசியில் பேசியிருக்கிறேன். அப்பொழுது எல்லாம் கூட்டணி தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் திடீரென்று நயினார் தான் காரணம் என்று கூறுகிறார்.
நயினார் நாகேந்திரன் செயல்பாடுகளால் தான் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி உள்ளோம், நயினார் நாகேந்திரன் அகங்காரத்தில் செயல்படுகிறார் என்று எதன் அடிப்படையில் கூறுகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை, எனக்கு விளங்கவில்லை. திருநெல்வேலி பாஷையில் கூற வேண்டும் என்றால், எனக்கு விளங்கல” என்று கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
“இந்திய நாட்டிற்கும் லண்டனுக்கும் நமது முதலமைச்சர் நேரடியாகச் சென்று நட்புருவை ஏற்படுத்தினாரா? முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக, முதலீடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதுவரை அதற்கான பதில் இல்லை” என்று கேள்வி எழுப்பினார்.
கொளத்தூர்த் தொகுதியில் 9000 ஓட்டுகள் திருட்டு நடைபெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அது தொடர்பாகத் தாங்கள் ஆய்வு செய்ய உள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தாமிரபரணி நதியைப் பொருத்தவரை அது மாநில அரசின் கடமை என்றும், உயர் நீதிமன்றமும் அதனை அறிவிக்கியுள்ளது என்றும் அவர்க் கூறினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், “சுதந்திரப் போராட்டத்திற்காகப் போராடிய நபர். வாய் போட்டுச் சட்டம் போட்டது அவருக்குத் தான். சுதந்திரப் போராட்ட தியாகிகள் அனைவரும் தற்போது ஜாதி தலைவராக ஆகிவிட்டார்கள். இப்போது அந்தச் சர்ச்சை வேண்டாம்” என்று தெரிவித்தார்.