அண்டை நாடான நேபாளத்தில் பேஸ்புக், யூ-டியூப் உள்ள வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை, GEN-Z இளைஞர்களை வீதியில் இறங்கிப் போராட வைத்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் வன்முறை வெடிக்க நாடே போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
நேபாளத்தில் ஆன்லைன் தளங்களை ஒழுங்குபடுத்தவும், தேவையற்ற பதிவுகளை கண்காணிக்கவும் அந்நாட்டு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டது. அதன்படி பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஏழு நாட்கள் அவகாசம் வழங்கியும் விதிமுறைகள் பின்பற்றப்படாததால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தொலைத்தொடர்பு ஆணையத்துக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதுதான் கே.பி. சர்மா ஒலி அரசுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பேஸ்புக், யூ-டியூப், எக்ஸ், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், ஸ்நாப்சாட் ஆகியவை முடக்கப்பட, அது நேபாள இளைஞர்களைக் கோபத்தில் ஆழ்த்தியது.
குறிப்பாக GEN-Z இளைஞர்கள் தலைநகர்க் காத்மாண்டுவில் வீதியில் இறங்கிப் போராட, நிலைமை எல்லை மீறி சென்றது. சர்மா ஒலி அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. சமூக வலைதளங்களுக்கான தடை நீக்கப்பட வேண்டும் என
இளைஞர்கள் முழக்கம் எழுப்ப, போராட்டத்தைக் கட்டுப்படுத்த களமிறக்கப்பட்ட ராணுவத்துடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டத்தைக் கலைக்க ரப்பர்க் குண்டு, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை விசிறி அடித்தும் பாதுகாப்பு படையினர் இளைஞர்களை விரட்ட முயன்றனர். தடியடியும் நடத்தினர். இந்த மோதலில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர்க் காயமடைந்தனர்.
போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ராணுவம், இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராட தடை விதித்தது. ஆனால், உத்தரவை மீறிய இளைஞர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படையினர் மீது மரக்கட்டைகள் மற்றும் தண்ணீர்ப் பாட்டிகளை வீசி, அரசுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர்.
நேபாள அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படும் நிலையில், அதில் இருந்து தப்பிக்கவே சர்மா ஒலி அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாக இளைஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சமூக வலைதளங்களை முடக்க நினைத்தால், நேபாள் பிரதமர் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டியது தான் எனவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.