இன்று நடைபெறும் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதுமான வாக்குகள் இருந்தும் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இண்டி கூட்டணி சார்பில் சுதர்சன ரெட்டி களம் காண்கிறார்.
இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. மாநிலங்களவை , மக்களவை சேர்த்து மொத்தம் 782 வாக்குகள் உள்ள நிலையில் வெற்றி பெற 392 வாக்குகள் தேவை என்ற நிலை உள்ளது.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 425 எம்.பி.க்களுடன், பெரும்பான்மையைவிட முன்னிலையில் உள்ளது. கடந்த 2022 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் மொத்த வாக்குகளில் 75 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
இதனிடையே குடியரசு துணை தலைவர் தேர்தலில் ரகசிய வாக்குசீட்டு முறை கடைப்பிடிக்கப்பட இருப்பதால், தற்போதைய எண்ணிக்கையை விட கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதில் இரு கூட்டணிகளும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 11 எம்.பி.க்களும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
குடியரசு துணை தலைவர் தேர்தல் நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் எப்-101 என்ற அரங்கில் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தும் அதிகாரியாக மேல்சபை செயலாளர் பி. சி. மோடி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 5 மணிக்கு வாக்கப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.