வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் ஹிமாச்சலப்பிரதேச மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.
உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் உயிரிழப்பும், பொருட்சேதமும் ஏற்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில அரசுகளுக்கு உதவியாக ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். மக்களைத் காக்க தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஏற்கெனவே பஞ்சாப் முதலமைச்சரிடம் பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹிமாச்சலப்பிரதேசத்திற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்ள உள்ளார். ஹிமாச்சலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பிரதமர் மோடி, ஹெலிகாப்டரில் சென்று பார்வையிடுகிறார்.
பின்னர், பஞ்சாப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களையும் பிரதமர் மோடி பார்வையிடுவார் என்று, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.