பொருளாதார நடவடிக்கை வெளிப்படையானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டியது அவசியம் என பிரிக்ஸ் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
அமெரிக்க வரி விதிப்பு குறித்து விவாதிக்க, பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு, பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தலைமையில் நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சர்வதேச வர்த்தகத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வரும் நிலையில், மிகவும் உறுதியான விநியோகச் சங்கிலியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
பல்வேறு இடையூறுகள் இருக்கும் நேரத்தில், அவைகளுக்கு எதிராக நமது நடவடிக்கை இருப்பதே நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு உலகிற்கு ஆக்கப்பூர்வமான மற்றும் கூட்டுறவு அணுகுமுறை தேவை எனவும் சுட்டிக்காட்டினார்.
வர்த்தகப் பிரச்னைகளுடன் வர்த்தகம் அல்லாத பிரச்னைகளை இணைக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். சர்வதேச வர்த்தகமானது, வெளிப்படையான, நியாயமான, பாகுபாடற்ற சமத்துவ விதிகளைச் சார்ந்ததாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்திய ஜெய்சங்கர், இதனைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும் தெளிவுபடுத்தினார்.