மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய மனு மீதான 3வது நீதிபதியின் விசாரணை நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஒத்திவைத்தது.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் சிக்கந்தர் தர்கா பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மொத்தம் 6 மனுக்களை நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு விசாரித்து, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால் இந்த வழக்கை விசாரிக்கும் 3ஆவது நீதிபதியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சங்க இலக்கியங்களில் திருப்பரங்குன்றம் மலை குறித்து கூறப்பட்டுள்ளதாகவும், அங்கு தர்கா 13 அல்லது 14ஆம் நூற்றாண்டுகளில்தான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினர்.
திருப்பரங்குன்றம் மலையில் சமண கல்வெட்டுகளும், அதில் தமிழ் பிராமி எழுத்துகளும் உள்ளதாகவும், அங்கு தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளதாகவும் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.