குற்றவாளிகளைவிட்டு தற்காத்துக் கொள்வோரை திமுக அரசின் காவல்துறை கைது செய்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தின் அருகில் புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய நிலையில், பாதிக்கப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி அவர்களையே திமுக அரசு கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
ஒருபுறம், பட்டியலினக் காவலாளர்களாய் தங்களை முன்னிறுத்தும் விசிகவினர், பட்டியலின உரிமைக்காக குரல் கொடுக்கும் ஏர்போர்ட் மூர்த்தி போன்ற தலைவர்களையே தாக்குவது அதிர்ச்சியளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
மறுபுறம் ‘நாடு போற்றும் நல்லாட்சி’ என்ற பெயரில், கூட்டணிக் கட்சியின் துணைகொண்டு, தங்களது தவறுகளை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அறிவாலய
அரசே தாக்குதல்களை நடத்தி, பாதிக்கப்பட்டோரையே கைது செய்து வேடிக்கைக் காட்டுகிறதோ என்னும் சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இரண்டு கட்சிகளும் சேர்ந்து சமூகநீதிக்கான கூட்டணி இதுவென்று வெற்று பெருமை பேசுவது தமிழகத்தின் சாபக்கேடு என்றும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.