விழுப்புரம் மாவட்டம் காணை பகுதி அருகே மக்கள் தங்களது சொந்த முயற்சியில் அமைத்த தார்ச் சாலையை திமுக எம்.எல்.ஏ அமைத்ததாகக் கூறி அக்கட்சியினர் பேனர் வைத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
டட் நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் இப்பகுதியில் பத்தாண்டுகளாகக் கரடு முரடான சாலை இருந்ததாகவும், இது தொடர்பாகப் பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே தங்களது சொந்த முயற்சியில் நபார்டு நிதி மூலம் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பகுதி மக்கள் தாங்களாகவே சாலை அமைத்தனர்.
இந்த நிலையில் சாலையை அமைத்துத் தந்த திமுக எம்.எல்.ஏ அன்னியூர் சிவாவுக்கு நன்றி என அக்கட்சியினர் பேனர் வைத்திருந்தனர்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பதில் பேனர் ஒன்றை வைத்தனர். அதில் விழித்திருங்கள் மக்களே, நீண்ட நாட்களாகச் சாலை அமைத்துத் தர வலியுறுத்தியும் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள் புதிதாக அமைக்கப்பட்ட சாலைத் தாங்கள் அமைத்தது எனப் பேனர் வைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பொதுமக்கள் அரசுக்கு அளித்த மனுவையும் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள இந்தப் பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.