குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இந்திய குடியரசு துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி. பி. ராதாகிருஷ்ணனுக்குத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
சி.பி.ராதாகிருண்னனின் தலைமைப் பண்பானது தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, பிரதமரின் தொடர் சீரிய முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இந்திய நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை பின்பற்றி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவராகச் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது கடமையை உறுதியுடன் நிறைவேற்றுவார் என நம்புவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில், குடியரசு துணைத் தலைவர்ப் பொறுப்பில் சி.பி.ராதாகிருஷ்ணனின் பணி சிறக்க வாழ்த்துவதாகக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகத் தேர்வு செய்து குடியரசு துணைத்தலைவராக்கிய பிரதமர் மோடிக்கு நன்றித் தெரிவிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வாழ்த்து செய்தியில், அனைவரின் பேராதரவுடன் 15வது குடியரசுத் துணைத் தலைவராகப் பதவியேற்று மாநிலங்களவையை வழிநடத்த இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு தேசத்தை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பைத் தமிழ் மண்ணின் மைந்தர் ஒருவர் அலங்கரிக்க இருப்பது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வாய்ப்பை நல்கி தமிழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றித் தெரிவிப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பொதுவாழ்வின் ஆரம்ப காலத்தில் இருந்து தேசிய தலைவராக உயர்ந்தது வரை, சி.பி.ராதாகிருஷ்ணனின் உழைப்பு, விடாமுயற்சி இளம் தலைமுறையினருக்கு மிகப்பெரிய உதாரணம் எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை புகழாரம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பெருமைமிகு மகனான சி.பி.ராதாகிருஷ்ணன், சேவை, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றின் அடையாளமாக எப்போதும் உயர்ந்து நிற்கிறார் எனவும் அண்ணாமலைத் தெரிவித்துள்ளார்.