இரண்டு நாட்கள் போராட்டத்தை அடுத்து அதிபர் மற்றும் பிரதமர் ராஜினாமா செய்ததால் நேபாளத்தில் இயல்பு நிலைப் படிப்படியாக திரும்பி வருகிறது.
சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தால் நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது. ஜென் Z இளைஞர்கள் மேற்கொண்ட தீவிரப் போராட்டங்களால் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. அவருடன் சேர்ந்து, அதிபர் ராம் சந்திரப் பவுடேலும் ராஜினாமா செய்தார்.
இருப்பினும் அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள் மற்றும் நாடாளுமன்ற கட்டடம் உள்ளிட்டவற்றுக்குப் போராட்டகாரர்கள் தீவைத்ததால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இதையடுத்துக் காத்மாண்டு உள்ளிட்ட முக்கிய இடங்களில் ராணுவத்தினர் களமிறக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
இதனிடையே நேபாளத்தில் சிக்கி தவித்த இந்தியர்கள் உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச், சோனாலி உள்ளிட்ட பகுதிகள் வழியாக நாடு திரும்பி வருகின்றனர்.
இதேபோல் இந்தியா – நேபாள எல்லையான மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கின் பனிடாங்கி பகுதியில் நேபாள் வாழ் இந்தியர்கள் எல்லையை கடந்து நாடு திரும்பி வருகின்றனர்.