கல்லூரி மாணவரைக் கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிதின்சாய் மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி தனசேகரனின் பேரன் சந்துரு கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி சந்துரு தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் கல்லூரி மாணவர் என்பதால் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், பத்தாயிரம் ரூபாய் சொந்த ஜாமின் செலுத்த வேண்டும் என்றும்,
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் திருமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டார்.`