அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில், மத்திய அரசு மேற்கொள்ளும் கிரேட்டர் நிகோபார் திட்டம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் பற்றி இனி விரிவாகப் பார்க்கலாம்…
அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நிகோபார் தீவில், 72 ஆயிரம் கோடி மதிப்பில் மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டத்தை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது. கலாதியா விரிகுடாவில் கண்டெய்னர்களை கையாளும் வகையிலான துறைமுகம், பொதுமக்கள் மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கு என இரட்டைப் பயன்பாடு கொண்ட கிரீன்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம், மின் உற்பத்தி நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள், திட்டமிடப்பட்ட நகர்ப்புற டவுன்ஷிப்கள், தளவாட மையங்கள், முதலீட்டை ஈர்க்கச் சுற்றுலா மற்றும் தொழில்துறை மண்டலங்கள் போன்றவைக் கட்டமைக்கப்பட உள்ளன.
இந்தத் திட்டம், சரக்கு பரிமாற்றத்திற்காகச் சிங்கப்பூர் மற்றும் கொழும்பு போன்ற வெளிநாட்டுத் துறைமுகங்களை இந்தியா சார்ந்திருப்பதைக் குறைக்கும். தற்போது, இந்தியாவின் பரிமாற்ற சரக்குகளில் 75 சதவிகிதத்திற்கும் அதிகமானவை வெளிநாடுகளில் கையாளப்படுகின்றன, இதனால் மதிப்புமிக்க அந்நியச் செலாவணியை இழக்க நேரிடுகிறது. இந்தத் திட்டம் இந்தியாவை ஒரு கடல்சார்ச் சக்தி மையமாகவும், பிராந்திய கப்பல் போக்குவரத்து மையமாகவும் நிலைநிறுத்தும்.
உலகின் மிக முக்கியமான கடல்சார் துறைமுகங்களில் ஒன்றான மலாக்கா ஜலசந்திக்கான, இந்தியாவின் நுழைவு வாயிலாகக் கிரேட் நிக்கோபார்த் தீவு உள்ளது. இந்தோனேசியாவில் இருந்து 150 மைல்களுக்கும் குறைவான தொலைவிலும், மலாக்கா ஜலசந்தியிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது இந்தத் தீவு.
மலாக்கா ஜலசந்தி, உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தையும், சீனாவின் எண்ணெய் இறக்குமதியில் 80 சதவிகிதத்திற்கு மேலும் கையாளுகிறது, இது ஆசியாவின் மிகவும் நுட்பமான எரிசக்தி மற்றும் வர்த்தக உயிர்நாடியாகவும் விளங்குகிறது.
இந்தியாவை பொருத்தவரையில், கிரேட்டர் நிகோபார் திட்டம், கடற்படை ஆற்றல், கடல்சார் கண்காணிப்பு, இந்தோ-பசிபிக் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒப்பிட முடியாத ஆற்றலை வழங்குகிறது. புவிசார் அரசியல் பதற்றம் நிலவும் கால கட்டங்களில் இந்த வழித்தடத்தின் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு இந்தியாவுக்குத் தீர்க்கமான நன்மையை அளிக்க வல்லது.
இது, தீவு ஒரு வர்த்தக மையமாக மட்டுமல்லாமல், முன்னோக்கிய ராணுவ தளமாகவும் செயல்படுவதை உறுதி செய்கிறது. அதுமட்டுமின்றி இந்தோ-பசிபிக் பாதுகாப்பு கட்டமைப்பில், குறிப்பாகக் குவாட் கட்டமைப்பிற்குள் இந்தியாவின் பங்கை வலுப்படுத்துகிறது.
மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து சீனாவின் எரிசக்தி இறக்குமதிகள் அனைத்தும் மலாக்கா நீரிணை வழியாகவே நடைபெறுகின்றன. இங்கு ஒரு வலுவான இந்திய கடற்படை இருப்பது, மோதலின் போது சீனாவின் எண்ணெய் விநியோகத்தை கோட்பாட்டளவில் தடுக்கலாம் அல்லது சீர்குலைக்கலாம என்றும், இது சீனாவுக்குக் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் துறைசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்
இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தற்போது நடத்தும் கூட்டு முயற்சியான மலாக்கா நீரிணை ரோந்துப் படையில் இந்தியாவும் சேரும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவின் ஆர்வத்தைச் சிங்கப்பூர் புரிந்து கொண்ட நிலையில், விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், இந்தியா அந்தமான் கண்காணிப்பு நடவடிக்கைகளை MSP இன் கடல்-வான் ரோந்துகள், உளவுத்துறைப் பகிர்வு வழிமுறைகளுடன் ஒருங்கிணைக்கும். இது பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், சீனாவின் எரிசக்தி உயிர்நாடியில் இந்தியாவின் இருப்பையும் உறுதிப்படுத்தும்.
கிரேட்டர் நிகோபார் திட்டத்தால், இந்தியா கடல்சார் அதிகார மையமாக மாறும், எண்ணெய் மற்றும் வர்த்தகப் பாதைகளில் ,இந்தியாவின் செல்வாக்கு திறன் உயரும், இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுடன் நெருக்கமான ஒத்துழைப்பு கிடைக்கும்.
கிரேட்டர் நிக்கோபார் திட்டம் வெறும் உள்கட்டமைப்பு மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சி மற்றும், இந்தோ-பசிபிக் அதிகாரச் சமநிலையில், இந்தியாவை முக்கிய பங்காளியாக நிலைநிறுத்த கூடியது.
ஆனால், ‘கிரேட் நிக்கோபார்த் தீவு திட்டம்’ என்பது பழங்குடியினரின் உரிமைகளை நசுக்கும் திட்டம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி விமர்சித்திருந்தார். எனினும், இந்தத் திட்டத்தின் தேசிய முக்கியத்துவத்தைப் பாஜக அவருக்கு உடனடியாக நினைவூட்டியது.
பாஜக மூத்த தலைவரான அணில் அந்தோணி, சோனியாகாந்திக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டத்தை, காங்கிரஸ் கட்சி எதிர்ப்பது மோசமானது என்று விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் எதிர்க்கும் திட்டங்கள், நாட்டின் நலனுக்கானது என்பதை நாடு உறுதியாக நம்ப வேண்டும் என அசாம் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் அசோக் சிங்காலும் எதிர்வினை ஆற்றியிருக்கிறார்.
ஒருபக்கம் சுற்றுச்சூழல் பாதிப்பு, மக்கள் இடப்பெயர்வு இருந்தாலும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதே அரசின் நோக்கமாக இருக்கிறது.
 
			 
                    















