கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியை அழைத்துச் செல்ல வீல் சேர்க்க வழங்கப்படாத விவகாரத்தில் இரண்டு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், பொதுமக்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முதியவரை அழைத்துச் செல்வதற்கு வீல் சேர் கேட்டு இரண்டு மணி நேரம் கடந்தும் கிடைக்காத காரணத்தால் அந்த முதியவரை அவரது மகனே இழுத்துச் செல்லும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வேகமாகப் பரவிய நிலையில், அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணி மேற்கொண்டு வரும் கிறிஸ்டல் எனும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் அலட்சியமாக நடந்து கொள்வது இது முதன்முறை அல்ல எனவும், அவர்களின் மெத்தனப் போக்கு வாடிக்கையாகவே நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல போதுமான பணவசதியின்றி அரசு மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகளிடம் தனியார் நிறுவன ஊழியர்கள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வதும் மிகுந்த சிரமத்தை உள்ளாக்கியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் ஐம்பது முதல் நூறு ரூபாய் கொடுத்தால் மட்டுமே வீல் சேர்த் தருவோம் என ஆணவத்துடன் பேசுவதாகவும் தனியார் நிறுவன ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உள்நோயாளிகளின் வார்டுகள், அதில் உள்ள படுக்கைகள் அசுத்தம் நிறைந்து காணப்படுவதோடு, மருத்துவமனை வளாகமும் குப்பைகள் நிறைந்து சுகாதாரச் சீர்கேடு நிலவும் நிலையில் இருப்பதாகவும் நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஏழை, எளிய மக்களுக்குச் சிகிச்சை அளிக்கவே தொடங்கப்பட்ட அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கான சிகிச்சையை பெறவே போராட வேண்டியிருப்பது சுகாதாரத்துறையின் கட்டமைப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.