“ஹமி நேபாளம்” என்ற அமைப்பின் தூண்டுதலால் நேபாளத்தில் நடத்தப்பட்ட “GenZ இளைஞர்கள் போராட்டம் நேபாள அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நேபாளத்தில் ஜென் Z இளைஞர்களின் ஆவேசப் போராட்டம் சமூக ஊடகத் தடைக்கு எதிரானது மட்டுமல்ல. அரசின் ஊழல் மற்றும் மோசமான நிர்வாகத்துக்கு எதிரான கோபமாகப் பார்க்கப்படுகிறது.
சமூக ஊடகத் தடை என்பது ஒரு தீப்பொறியாக, நேபாள இளைஞர்களின் கோபம், காட்டுத் தீயாக இன்னமும் கொழுந்து விட்டு எரிகிறது.
ஆத்திரத்தில், மூத்த அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் தாக்கப்பட்டனர். அரசு அலுவலகங்கள்,காவல் நிலையங்கள்,ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன. குறிப்பாக, நாடாளுமன்ற வளாகம், அதிபர், பிரதமர்,அமைச்சர்கள் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
இளைஞர்களின் போராட்டம் ஒரே நாளில் அரசின் அடித்தளத்தையே அசைத்துவிட்டது. பிரதமர்க் கே.பி. ஷர்மா ஒலி மற்றும் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பி சென்றுள்ளனர்.
நேபாள இளைஞர்களின் போராட்டம், சிறை உடைப்புக்கும் வழி வகுத்தது. லலித்பூர் நகு சிறைத் தீவைக்கப்பட்டது. கூட்டுறவு நிதி மோசடி வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சியின் தலைவரும், நேபாளத்தின் முன்னாள் உள்துறை அமைச்சருமான ரபி லாமிச்சானைப் போராட்டக்காரர்கள் விடுவித்தனர்.
இந்தச் சிறையில் இருந்த சுமார் 1200க்கும் மேற்பட்ட மொத்த கைதிகளும் தப்பியதாகக் கூறப்படுகிறது. இதேபோல், துளசிபூர் சிறையும் உடைக்கப்பட்டதால், அங்கிருந்த கைதிகளும் தப்பியுள்ளனர்.
போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவரவும், அமைதியை நிலைநாட்டவும், இராணுவம் அரசு நிர்வாகத்தைக் கையில் எடுத்துள்ளது. நாடு தழுவிய பாதுகாப்பு நடவடிக்கையாக, நாட்டின் முக்கிய நகரங்களில் இராணுவம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
நேபாளத்துடன் 729 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பீகாரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகக் கிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண், சீதாமர்ஹி, மதுபானி, அராரியா, சுபால் மற்றும் கிஷன்கஞ்ச் ஆகிய ஏழு மாவட்டங்கள் உயர்மட்ட கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் ஷ்ரவஸ்தி, பால்ராம்பூர், பஹ்ரைச், பிலிபிட், லக்கிம்பூர் கேரி, சித்தார்த்நகர் மற்றும் மகாராஜ்கஞ்ச் ஆகிய மாவட்டங்களும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளன.
எல்லைப் பாதுகாப்புப் பணியில் நாட்டின் துணை ராணுவப் படையான சஷாஸ்திரச் சீமா பால் (SSB), கண்காணிப்பு முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் நடந்து வரும் வன்முறை குறித்து ஆழ்ந்த கவலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அந்நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.