பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் SUNJAY KAPOOR உயிரிழந்துவிட்ட நிலையில், அவரின் சொத்து யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை வெடித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் வரைச் சென்றுள்ள வழக்கு தொடர்பாக விரிவாகப் பார்ப்போம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
பாலிவுட் திரையுலகில் பிரபல நட்சத்திரமாக ஜொலித்த கரிஷ்மா கபூரும், தொழிலதிபருமான SUNJAY KAPOORம் 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு சமைரா என்ற மகளும், கியான் என்ற மகனும் உள்ளனர். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்தத் தம்பதி, 2016ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதன் பின்னர் பிரியா சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் SUNJAY KAPOOR. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை கொண்டிருந்த 53 வயதான SUNJAY KAPOOR, கடந்த ஜூன் மாதம் லண்டனில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிலையில் தான் SUNJAY KAPOOR-ன் சொத்துகள் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை வெடித்துள்ளது. SUNJAY KAPOORருடன் வாழ்ந்து வந்த பிரியா சச்தேவ், கணவரின் சொத்து தனக்கும், தன் மகனுக்குமே சொந்தம் என்று கூறுகிறார். இதற்கு ஆதாரமாக SUNJAY KAPOORரின் உயிலை அவர் முன்வைக்கிறார்.
அதே நேரத்தில் SUNJAY KAPOORரின் சொத்துகளுக்குத் தாங்களே வாரிசு என்று கூறுகின்றனர் கரிஷ்மா கபூரின் குழுந்தைகளான சமைராவும், கியானும். இந்தச் சொத்து பிரச்னை வெறும் வார்த்தை மோதலாக மட்டுமே இல்லாமல் நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளது.
கரீஷ்மா கபூரின் பிள்ளைகள் இருவரும், தந்தை SUNJAY KAPOOR சொத்தில் உரிமை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களுடைய தந்தையின் 30,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்குத் தாங்களே வாரிசு என்றும், தங்களுக்கே அது சொந்தமாக வேண்டும் எனவும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
மேலும், தன்னுடைய தந்தையுடன் வாழ்ந்து வந்த பிரியா, தந்தை எழுதி வைத்த உயிலை மாற்றி எழுதி மோசடி செய்திருப்பதாகவும் மனுவில் அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். உண்மையான உயிலை அவர்கள் யாரிடமும் காட்டவில்லை என்றும், சட்டப்படி சொத்து தங்களுக்கே சேர வேண்டும் எனவும், எனவே நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறும் மனுவில் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதன் கிழமை விசாரணைக்கு வந்தபோது ஆஜரான பிரியா, SUNJAY KAPOOR – கரிஷ்மா கபூர் விவாகரத்தை சுட்டிக்காட்டி, தாம் தான் சட்டப்பூர்வ மனைவி என வாதிட்டார். மேலும், கரிஷ்மாவின் குழந்தைகள் ஏற்கெனவே 1900 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
SUNJAY KAPOORரின் சகோதரியான மந்திரா கபூர், தன்னுடைய தாயார் ராணி கபூரை கட்டாயப்படுத்தி சில ஆவணங்களில் பிரியா கையெழுத்து பெற்றிருப்பதாகவும், SUNJAY KAPOOR இறந்த சில நாட்களிலேயே இது நடந்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது எந்த மாதிரியான ஆவணங்கள் என்பதைத் தங்களிடம் தெரிவிக்க மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள SUNJAY KAPOORரின் தாய் ராணி கபூர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், நீதிமன்றத்தில் இதையே சுட்டிக்காட்டினார். மேலும், தனது மகனின் சொத்தில் பத்தாயிரம் கோடி ரூபாய் சொத்துக்கு ராணி கபூர் உரிமை கோரினார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், உயிலின் நகலை கரிஷ்மாவின் குழந்தைகளிடம் ஏன் கொடுக்கவில்லை என்று ப்ரியாவுக்குக் கேள்வி எழுப்பியதுடன், நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்க உத்தரவிட்டது. மேலும், பிரியாவின் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சொத்து பிரச்னைக்கிடையே, SUNJAY KAPOOR மரணம் தொடர்பாகவும் அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியிருக்கின்றனர். SUNJAY KAPOORரின் இறப்பு இயற்கையான மரணம் அல்ல என்றும், சந்தேகத்திற்கிடமானது எனவும், அவரது தாயார் ராணி கபூர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக இங்கிலாந்து அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதி, விசாரணை நடத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மந்திரா கபூரும் தனது சகோதரர் SUNJAY KAPOORரின் மரணத்தில் சந்தேகம் எழுப்பியிருப்பதால், பாலிவுட் திரை உலகில் பரபரப்பு நிலவுகிறது.