கத்தார் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை கூண்டோடு அழிக்கும் வகையில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்து கத்தார் தலைநகர் தோஹாவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், கத்தார் பாதுகாப்பு படை வீரர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இருப்பினும் தங்களின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புடன் உள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், கத்தார் மன்னர் அமீர் ஷேக்கை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சகோதரத்துவ நாடான கத்தாரின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் பிரச்னைகளை தீர்க்கவும், மோதல் அதிகரிப்பதை தவிர்க்கவும் ஆதரவு அளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா உறுதியுடன் நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.