பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், பாமக செயல் தலைவர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து அன்புமணியை நீக்கியதாக தெரிவித்தார்.
பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் அன்புமணியுடன் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது என்றும், பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரை அடிப்படையில் அன்புமணியை நீக்கியதாகவும் கூறினார்.
அன்புமணி மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையானது எனக்கூறிய அவர்,
கட்சியின் நற்பெயருக்கும், வளர்ச்சிக்கும் எதிராக செயல்பட்ட அன்புமணி அரசியல்வாதியாக இருக்க தகுதியற்றவர் என தெரிவித்தார்.
எதிர்காலத்தில் யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்த ராமதாஸ், அன்புமணியை சுற்றி இருப்பவர்கள் திருந்தி வந்தால், அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வேன் என குறிப்பிட்டார்.
தான்தோன்றிதனமாக, மூத்தோர் சொல்பேச்சை கேட்காமல் அன்புமணி செயல்பட்டார் என்றும், தந்தையிடம் தோற்பதில் தவறில்லை என பழ.கருப்பையா போன்றோர் அறிவுரை கூறியும் அன்புமணி கேட்கவில்லை எனவும் கூறினார்.
தனையன் செயல், தந்தையின் செயலைவிட உயரமாக இருக்க கூடாது என்று கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் பேசியது இதற்கு பொருந்தும் என சுட்டிக்காட்டிய அவர்,
யார் அறிவுரை சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அன்புமணி இல்லை என தெரிவித்தார்.
பாமகவில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி தனியாக கட்சி ஆரம்பித்து கொள்ளலாம் என்றும்,
தனி மனிதனாக தாம் ஆரம்பித்த கட்சியில் யாரும் உரிமை கொண்டாட முடியாது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், பாமக வளர்ச்சிக்கு குந்தகமாக இருந்த களையை நீக்கிவிட்டதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.