நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்த ஹோட்டல், ஒரே இரவில் உருவாக்கப்பட்டதல்ல. ஷங்கர் குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஹில்டன் ஹோட்டலுக்கு, 2016ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. நேபாளத்தின் சுற்றுலாத் துறையை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லும் நோக்குடன் ஹில்டன் ஹோட்டல் உருவாக்கப்பட்டது.
இதன் கட்டுமானத்தில் பல ஆண்டுகளாக தொய்வு ஏற்பட்டது. குறிப்பாக கொரோனா காலத்தில் பணிகள் பெரிதும் தாமதமாகின. இருப்பினும், 7 ஆண்டு முயற்சியின் பலனாக, சுமார் 800 கோடி ரூபாய் முதலீட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம்தான் ஹில்டன் ஹோட்டல் திறக்கப்பட்டது.
நக்சல்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள இந்த ஹோட்டல், நேபாளத்தின் மிக உயரமான ஹோட்டலாக அறியப்பட்டது. 64 மீட்டர் உயரமுள்ள இந்த ஹோட்டல், பல்வேறு பிரிவுகளில் கிட்டத்தட்ட 176 அறைகள் மற்றும் Suit-களை உள்ளடக்கியது.
இது ஆடம்பர ஹோட்டல் என்பதைவிட நேபாள கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்பட்டது. முகப்பில் புத்த மதக் கொடிகள், செங்குத்து கண்ணாடிகள், பகல்-இரவு நேர வெளிச்சத்திற்கு ஏற்ற வண்ணங்கள் என இந்த ஹோட்டல் உயிர் பெற்றது. இதன் கட்டிடக் கலையும் அதன் சுற்றுப்புறங்களுக்கு ஏற்ப அமைந்திருந்தது. ஒருபுறம் காத்மாண்டு நகர்ப்புற வீதிகளை நோக்கி சாய்ந்தபடியும், மறுபுறம் லாங்டாங் மலைத்தொடரை நோக்கியும் அமைந்து நேபாளத்தின் இயற்கை அழகை விருந்தினர்கள் ரசிக்கும்படி கட்டப்பட்டது.
5 உணவகங்கள், அரங்குகள், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம் என எண்ணற்ற வசதிகள் கொண்ட இந்த ஹோட்டல், நேபாளத்தின் நில அதிர்வு வரலாற்றைக் கருத்தில் கொண்டு, மீள்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டது.
இப்படி நேபாளத்தின் அடையாளமாக விளங்கிய இந்த ஹோட்டல் இன்று உருக்குலைந்து காணப்படுகிறது. கண்ணாடி கட்டுமானத்துடன் கம்பீரமாக நின்ற இந்த ஹோட்டல், தீயில் கருகி, கண்ணாடிகள் வெடித்துச் சிதறி, சாம்பல் புகை படிந்து, உட்புறமும் சேதமடைந்து நிற்கிறது. பல ஆண்டு உழைப்பு, பெரும் முதலீடு, கலாசாரம் அடையாளம் என பார்த்து பார்த்து கட்டப்பட்ட இந்த ஹோட்டல், மக்களின் பெரும் கோபத்தால் சிதைக்கப்பட்டிருப்பது பலரையும் கவலைக்குள்ளாக்கி உள்ளது.
சமூக வலைதளங்கள் மீதான கட்டுப்பாடுகளால் நேபாளத்தில் தொடங்கிய போராட்டம், ஊழல், அரசியல் மந்தநிலை என விரிடைந்தது. பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் ராஜினாமா கூட மக்களின் கோபத்தை தணிக்கவில்லை. இதனால் அங்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு, சுற்றுலாத் துறைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நேபாளத்தின் பொருளாதாரத்திற்கே பெரும் அடியாக அமைந்துள்ளது.