கடந்த சில மாதங்களாக இந்தியாவைக் கடுமையாக விமர்சித்து வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்பு, எப்போதுமே பிரதமர் மோடியுடன் நண்பராக இருப்பேன் எனக் கூறி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். ட்ரம்ப் U-TURN அடிப்பதற்கு என்ன காரணம் ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2017ம் ஆண்டில் முதல் முறையாக அமெரிக்காவில் ட்ரம்பைச் சந்தித்த மோடி, ஹூஸ்டன் மற்றும் அகமதாபாத்தில் நடந்த மாபெரும் கூட்டங்களில் அவருடன் இணைந்து பங்கேற்றார். அன்றிலிருந்து பிரதமர் மோடி மற்றும் அதிபர் ட்ரம்ப் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்புறவு உருவானது.
ஒரே மாதிரியான அரசியல் கண்ணோட்டம் மற்றும் சீனாவை எதிர்கொள்வதில் இருக்கும் பொதுவான கருத்து ஆகியவை இருவரின் உறவையும் மேலும் வலுவடைய செய்தது. இந்த நட்பு அமெரிக்க – இந்திய கூட்டுறவையும் பலப்படுத்தியுள்ளது. இந்தியாவை விமர்சித்தாலும் ட்ரம்ப் ஒருபோதும் பிரதமர் மோடியை விமர்சித்ததில்லை.
2021-ல் அமெரிக்காவின் எண்ணெய் ஏற்றுமதியில் இந்தியா முதல் இடத்தில் இருந்தது. 2022-ல் ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கியதும் உலகளாவிய எண்ணெய் சந்தைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டது. சர்வதேச எண்ணெய் விலையை கட்டுக்குள் வைத்திருக்க ,அனுமதிக்கப் பட்ட அளவில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை கொள்முதல் செய்தது.
இதற்கிடையே, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், இந்தியா- பாகிஸ்தான் போரை தாம் நிறுத்தியதாக ட்ரம்ப் அறிவித்ததை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் 50 சதவீத வரி விதித்த நிலையில், கச்சா எண்ணெய் இறக்குமதி என்பது இந்தியாவின் தேசன் நலன் மற்றும் நாட்டின் தேவை சார்ந்தது என்று இந்தியா தெளிவாக கூறியது.
இதற்கிடையே, கடந்த 7 ஆண்டுகளில் முதல் முறையாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபரையும் ரஷ்ய அதிபரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த மூன்று தலைவர்களும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. உடனே, அமெரிக்காவுக்கு எதிராக மூவரும் ‘சதி’ செய்ததாக ட்ரம்ப் கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தார்
இந்திய பொருளாதாரமும் ரஷ்ய பொருளாதாரமும் இறந்து விட்டன என்றும், ரஷ்யாவும் இந்தியாவும் சீனாவிடம் சரணடைந்து விட்டன என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார் அதிபர் ட்ரம்ப். ரஷ்ய எண்ணெய் மூலம் இந்தியா சம்பாதிக்கும் பணம், உக்ரைன் போரில் சிந்தும் ரத்தத்தின் பணம் என்று ட்ரம்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்திருந்தார்.மேலும், இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தையும் ட்ரம்ப் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிதியாண்டின் ஏப்ரல்–ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நாட்டின் பங்கு சந்தையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.
கூடுதலாக, GST 2.0 வரி சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.
இந்தச் சுழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நல்ல நண்பரான பிரதமர் மோடியுடன் விரைவில் பேச ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.இரண்டு பெரிய நாடுகளுக்கும் இடையே வெற்றிகரமான வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்காது என்று உறுதியாக நம்புவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, ட்ரம்பின் உணர்வுகளையும், இந்திய – அமெரிக்க உறவுகள் குறித்த அவரது நேர்மறையான மதிப்பீட்டையும் ஆழமாகப் பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நான்கு முறை தொலைபேசியில் பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு ட்ரம்ப் முயற்சித்த போதும் அவரின் அழைப்பை மோடி புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.