வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கடந்த 5ம் தேதி உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில், மேகவெடிப்பு காரணமாக குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அதில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனுக்கு சென்ற பிரதமர் மோடி, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, மீட்பு பணியில் ஈடுபட்ட NDRF, SDRF குழுவினருடனும் கலந்துரையாடினார். அப்போது, அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.