பல்லடம் அருகே முறைகேடான சாலைப் பணியை தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர் மீது திமுக பேரூராட்சி தலைவர், வாகனத்தை மோதச் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சாமளாபுரம் திமுக பேரூராட்சி தலைவரான விநாயகா பழனிசாமி என்பவர், காரணம்பேட்டையில் இருந்து தனது வீட்டிற்கு பொலிரோ ஜீப்பில் சென்றுள்ளார். கருக்கம்பாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பொலிரோ ஜீப் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், படுகாயமடைந்த சமூக ஆர்வலரான பழனிசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற திமுக பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, லட்சுமி கார்டன் பகுதியில் முறைகேடாக நடந்த தார் சாலை அமைக்கும் பணியை சமூக ஆர்வலர் பழனிசாமி, மனு கொடுத்து தடுத்து நிறுத்தியது தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த பேரூராட்சி தலைவர், மது போதையில் வாகனத்தை மோதச் செய்து, கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, திமுக பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.