இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும் வகையில், லான்சா-என்ஐ போர்க்கப்பலில் 3டி ரேடார் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஸ்பெயினில் உள்ள உலகின் முன்னணி ரேடார் உற்பத்தி நிறுவனமான இண்ட்ரா நிறுவனத்துடன் 2020ஆம் ஆண்டு டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம் 145 மில்லியன் டாலர் மதிப்பில் ரேடார்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு இரு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றவுள்ள நிலையில், இந்திய கடற்படைக்கு இண்டரா நிறுவனம் 3 ரேடார்களை வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ரேடார்கள் 9 முதல் 474 கிலோ மீட்டர் தூரம் மற்றும் ஒரு லட்சம் அடி உயரம் வரை சென்று விமானங்களை கண்டறிந்து பின்தொடரக்கூடிய திறன் கொண்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய கடற்படையில் உள்ள லான்சா-என்ஐ போர்க்கப்பலில் 3டி ரேடார் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக கடற்படையின் ஃபிரிகேட் கப்பல்களில் ரேடார்கள் நிறுவப்படவுள்ளதாகவும், உற்பத்தியை எளிதாக்க கர்நாடகாவில் உள்ள TASL தொழிற்சாலையில் ரேடார் அசெம்பிளி, ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.