தனியார் பங்களிப்புடன் 2000 MAXI CAB வேன்களை மினி பேருந்துகளாக பொதுப் போக்குவரத்தில் இணைத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள தகவலில், 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கும் வகையில் 5 ஆயிரம் மினி பேருந்துகள் இயக்குவதற்கான தேவை உள்ளது என்றும்,
இதுவரை ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட ஆப்ரேட்டர்கள் மட்டுமே பல்வேறு வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க அனுமதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம பகுதிகளை இணைக்கும் வகையில் 25 கிலோ மீட்டர் தூரம் வரை மினி பேருந்துகளை இயக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், பல்வேறு வழித்தடங்களில் கூடுதலாக இயக்குவதற்காக MAXI CAB வேன்களை மினி பேருந்துகளாக இயக்கிட அனுமதி வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தனியார் வேன்களை மினி பேருந்துகளாக இயக்கிக் கொள்வதற்கான அனுமதியை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட வாகனங்களில் இருக்கைகளை மட்டுமே நிரப்பிட வேண்டும் என்றும், நின்றபடியோ, படிகளில் தொங்கிய படியோ வேன்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படுவதன் மூலம், பொது போக்குவரத்து எளிமைப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.