சமூக வலைத்தளங்களுக்கான தடைக்கு எதிரான GEN Z இளைஞர்களின் போராட்டம், 24 மணி நேரத்துக்குள் நேபாள அரசியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி, நேபாளம் இந்து தேசமாக மன்னர் ஆட்சிக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
அரசியல் நிலையின்மையால் நாட்டில் வளர்ச்சி இல்லை எனப் பெரும்பாலான நேபாள மக்கள் கருதுகின்றனர். கடந்த ஆண்டு நேபாளத்தின் வளர்ச்சி விகிதம் 3.1 சதவிகிதமாக இருந்தது. நேபாளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட கால் பங்கு வெளிநாட்டில் வசிக்கும் நேபாள மக்களிடமிருந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் சுமார் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேபாளத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
இளைய தலைமுறையினரின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல், அமைதியான நேபாள மக்களுக்கு எதிரான அரசின் வன்முறையை நேபாளத்தின் முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷா கண்டித்துள்ளார்.
முன்னதாக, 2006ம் ஆண்டில், நாடு தழுவிய போராட்டங்கள் மற்றும் சர்வதேச அழுத்தங்களைத் தொடர்ந்து, ஞானேந்திரா ஷா நாடாளுமன்றத்தைக் கொண்டு வந்தார். இரண்டு ஆண்டுகளில் 239 ஆண்டுகால மன்னராட்சியை ஒழித்து, கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து சராசரி குடிமகனாக ஞானேந்திர ஷா வாழ்ந்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் ஞானேந்திரா மேற்கு நேபாளச் சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பியபோது, அரசக் குடும்ப ஆதரவாளர்கள் சுமார் 10,000 தலைநகர் வழியாக அணிவகுத்துச் சென்று திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் மன்னரை வரவேற்றனர். கூடுதலாக, முடியாட்சி திரும்பவும், நேபாளத்தை மீண்டும் ஒரு இந்து நாடாக அறிவிக்கவும் அழைப்பு விடுத்தனர்.
உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தில் மதச்சார்பற்ற புதிய அரசியல் சாசனம் 2015 ஆம் ஆண்டு, கொண்டுவரப்பட்டது. சீனாவின் உதவியுடன் நேபாளத்தின் அரசியல் அமைப்பின் மீது தங்கள் கட்டுப்பாட்டை வைத்திருக்க மாவோயிஸ்டுகள் நாட்டை ‘மதச்சார்பற்ற’ நாடாக மாற்றினர் என்று கூறப்படுகிறது. அப்போதே அரசியல் சாசனத்துக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன.
கடந்த 17 ஆண்டுகளில் 14 அரசுகள் மாறியுள்ளன. எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் முழுமையான ஆட்சிக்காலத்தை நிறைவு செய்ததில்லை. நாட்டில் அரசியல் குழப்பங்களே நிலவி வந்தன.
2015ம் ஆண்டு, மன்னராட்சி காலத்தில் இருந்ததைப் போலவே நேபாளத்தை ‘ இந்து ராஷ்ட்ரம் ‘ என்று அறிவிக்க வேண்டும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார். குறிப்பாக, பல நூற்றாண்டுகளாகவே யோகி ஆதித்யநாத்தின் கீழ் இயங்கும் கோரக்நாத் மடம் தான் நேபாள அரசக் குடும்பத்தின் ராஜ குருமடமாக விளங்கி வருகிறது.
நாடாளுமன்றத்தில் 14 உறுப்பினர்களைக் கொண்ட ராஷ்டிரிய பிரஜாதந்திரா கட்சி மீண்டும் மன்னர் தலைமையில் ஆட்சி வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. நேபாளத்தை இந்து தேசமாக அதன் பண்டைய அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான இயக்கம் வளர்ந்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.
ஜனநாயக அரசு மீது அதிருப்தியடைந்துள்ள நேபாள மக்கள் மீண்டும் மன்னராட்சிக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளனர். NEPAL FOR CHRIST நேபாளம் ஏசுவுக்கே என்பது போன்ற வெளிப்படையான பெயர்களில் மதமாற்ற சக்திகளும் நேபாளத்தைச் சொந்தம் கொண்டாட செயல்பட்டு வரும் நிலையில் மீண்டும் இந்து தேசமாக அறிவிப்பது ஒன்றுதான் சரியான நடவடிக்கை என்று பெரும்பாலான நேபாள மக்கள் விரும்புகின்றனர்.