சேலம் மாநகரில் உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் உலாவும் தெரு நாய்களால், நடை பயிற்சி செல்வோர் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் . சேலம் மாநகரில் உள்ள ஒரே மைதானமான இங்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள வருகை தருகின்றனர். மேலும் பலர் காலை மற்றும் மாலை நேரங்களில் இங்கு நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள், மைதானத்திற்கு வருவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. விளையாட்டு மைதானத்திலேயே முகாமிட்டுள்ள அவை, மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடங்களில் படுத்து உறங்கி
இடையூறு விளைவிக்கின்றன.
சில நேரங்களில் அங்கு பயிற்சி மேற்கொள்ள வருபவர்களை தெருநாய்கள் துரத்தியும், கடித்துக் குதறியும் வருகின்றன. இதனால், மக்களால் நிம்மதியாக நடைபயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, விளையாட்டு மைதானம் முழுவதும் அவை அசுத்தம் செய்துவைப்பதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, மைதானத்தில் இருந்து கழிவுநீர் வெளியேற போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதனால், சிறிய மழை பெய்தால்கூட மைதானத்தில் நீர்த் தேங்கிவிடுதாகவும், அண்மையில்கூட மழைநீர் தேங்கியதால் முதல்வர்க் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மைதானத்தில் அவ்வப்போது பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் நிலையில், போட்டிகள் முடிவடைந்த பிறகு குப்பைகள் அகற்றப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.
அருள், ஏற்காடு அடிவாரம்)இப்படி, நாய்கள் தொல்லை, மழைநீர் தேக்கம், குப்பைகூளம் உள்ளிட்டவற்றால், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் பயன்படுத்த முடியாத நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.