செவ்வாய் கிரகத்தில் பில்லியன் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழத் தகுதியானவையா? என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அதற்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மார்ஸ் ரோவரை விண்ணுக்கு அனுப்பியது.
செவ்வாய் கிரகத்தின் புவியியல் அம்சங்களை ஆராய்ந்து தரவுகளைச் சேகரித்துப் பூமிக்கு அனுப்பி வரும் மார்ஸ் ரோவர் விண்கலம், தற்போது பிரமிக்க வைக்கும் தகவலை பூமிக்கு அனுப்பியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் வறண்ட நதி கால்வாயில் பாறைகள் இருப்பதை கண்டறிந்துள்ள விண்கலம், அது குறித்து சமிஞ்ஞைகளை பூமிக்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை நேரடியாகக் கண்டறியும் அளவுக்கு திறன் படைத்தது இல்லை மார்ஸ் ரோவர் விண்கலம் . மாறாக, பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் உயிரினங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்ட இடங்களில் பாறைகளை ஊருடுவி, பின்னர் அது குறித்த தரவுகளைப் பூமிக்கு அனுப்பும் திறன்பெற்றுள்ளது. மாதிரிகளையும் சேகரித்து வருகிறது
அந்த வகையில் தான், வறண்ட நதி கால்வாயில் பாறைகள் இருப்பதாக மார்ஸ் ரோவர் தகவல் அனுப்பியுள்ளது. இதன்மூலம் மட்டுமே, உயிரினங்கள் வாழத் தகுதியான கிரகம் செவ்வாய் என்ற முடிவுக்கு வந்து விட முடியாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால், அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மார்ஸ் ரோவர் விண்கலம் இதுவரை 25 மாதிரிகளை சேகரித்து வைத்துள்ளது. மொத்தம் 30 மாதிரிகளை சேமிக்கும் வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், செவ்வாய் கிரகம் தொடர்பான மேலும் பல விவரங்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
2030-ம் ஆண்டில் தான் விண்கலம் பூமிக்குத் திரும்பும் எனக் கூறப்படும் நிலையில், அதுவரைச் செவ்வாய் கிரகம் தொடர்பான நேரடி மாதிரிகள் விஞ்ஞானிகளுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.
அப்படி, நேரடியாக மாதிரிகள் கைக்குக் கிடைக்கும்போது, அண்டார்டிக்காவில் நுண்ணுயிரிகள் வாழ்வது எப்படி உறுதி செய்யப்பட்டதோ ? அதே போன்றதொரு சோதனையை மேற்கொண்டு செவ்வாய் கிரகத்தின் உண்மைத் தன்மையை கண்டறிய முடியும்.
எப்படி என்று கேட்கிறீர்களா, பொதுவாக SULFATE MINERAL-களை SULPHIDE – ஆக மாற்றும் குணம் கொண்டது நுண்ணுயிரிகள். மார்ஸ் ரோவர் விண்கலம் கொண்டு வரும் மாதிரிகளிலும் அப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்திருந்தால், செவ்வாய் கிரகமும் உயிரினங்கள் வாழத் தகுதியானது என்று உறுதியாகக் கூறலாம்.