திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையேயான பிரச்னைத் தொடர்பான வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பியதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தைத் தொடங்கியதாக ஃபெப்சி குற்றம் சாட்டியது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும் எனத் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஃபெப்சி அமைப்பு கடிதம் எழுதியது.
இதனால், படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இருசங்கங்கள் இடையேயான பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜனை மத்தியஸ்தராக நியமித்துப் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியஸ்தர் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பும் சமரசம் செய்து கொண்டதாகத் தயாரிப்பாளர் சங்கம் தரப்பிலும், பெப்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.