அதிமுக ஒருங்கிணைப்புக்கான தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரமிருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.
இதனால் அவர் வகித்து வந்த கட்சி பதவிகள் அதிரடியாகப் பறிக்கப்பட்டன. தொடர்ந்து ஹரித்வார் ஆன்மிகப் பயணம் செல்வதாகக் கூறிவிட்டு டெல்லிக் கிளம்பிய செங்கோட்டையன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமனைச் சந்தித்து பேசியிருந்தார்.
செங்கோட்டையனின் செயல் பேசுப்பொருளாகிய நிலையில் அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் குவிந்து வருகின்றன. இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது நண்பரின் குடும்ப விழாவிற்குச் சென்ற செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், எல்லோரையும் போல நல்லதையே நினைத்து நல்லதையே செய்வோம் எனக் கூறினார். அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.