தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் முன்னிலையில், 58 வயதான பூங்கா ஊழியர் ஒருவர், சிங்கக் கூட்டத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
பாங்காக்கில் சஃபாரி உலக உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு சிங்கம், யானை, உராங்குட்டான் குரங்கு, கடல் சிங்கம் உள்ளிட்ட விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
1988ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தப் பூங்கா 480 ஏக்கர் திறந்தவெளி பூங்காவாகவும், 180 ஏக்கர்ப் பறவைகள் சரணாலயமாகவும் உள்ளது.
இந்தப் பூங்காவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வந்தவர் ஜியான் ராங்காரஷாமி. இவர் சிங்கங்கள் வசிக்கும் பகுதிக்குப் பாதுகாப்பு விதிகளை மீறி காரில் சென்று இறங்கியுள்ளார். அப்போது அவரை சிங்கங்கள் கடுமையாகத் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
சுமார் 15 நிமிடங்கள் ஜியான், சிங்கங்களுடன் போராடினார். ஆனால் தப்பிக்க முடியாமல் படுகாயங்களுடன் தவித்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்துப் பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். 40 ஆண்டுகால பூங்கா வரலாற்றில் இதுவரை இந்த மாதிரியான சம்பவம் நடந்ததே இல்லை என்கிறார்கள் பூங்கா ஊழியர்கள்.