ஆட்சிக் கவிழ்ப்பு சதித்திட்டத்தை வழிநடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட பிரேசிலின் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் தண்டனை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிட்டத்தட்ட 140 ஆண்டுகளுக்குப் பிறகு பிரேசில் குடியரசாக மாறியதிலிருந்து ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதற்காக முன்னாள் அதிபர் தண்டிக்கப்பட்டது இதுவே முதல் முறை. அது பற்றிய செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
2022-ல் நடந்த பிரேசில் தேர்தலில் அதிபர் போல்சனாரோ, அதிர்ச்சி தோல்வி அடைந்தார். தேர்தலில் நடந்த முறைகேடுகள் தான் தமது தோல்விக்குக் காரணம் என்று போல்சனாரோ குற்றஞ்சாட்டியிருந்தார். ராணுவம் மற்றும் விமானப்படைத் தளபதிகளின் ஆதரவைப் பெற முடியாததால், தேர்தல் முடிவுகளை ராணுவ முன்னாள் கேப்டனான போல்சனாரோவால் மாற்றமுடியவில்லை.
ஊழல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோதிலும், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பிறகு அதிபராவோம் என்று லூலா கூட நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். 2023ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அதிபராக லுாலா டா சில்வா பதவியேற்றார்.
பதவியேற்கும் போதே தனது அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாது என்றும், அதே நேரம் தவறு செய்தவர்கள் நீதிக்குப் பதிலளிப்பார்கள் என்றும் அதிபர் லுலா டா சில்வா தெரிவித்திருந்தார்.
அடுத்த 8வது நாளில் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் பிரேசில் தலைநகரில் அரசு அலுவலகங்களைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இந்தக் கலவரத்தில், போல்சனாரோவின் ஆதரவாளர்கள் சுமார் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்ததாகவும் போல்சனாரோ மீது குற்றம் சாட்ட பட்டது.
பிரேசிலின் வாக்களிப்பு முறையே மோசடியானது என்று பொய்யாகக் கூறியதற்காகப் போல்சனாரோ 2030 வரை எந்தப் பொதுப் பதவிக்கும் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. லுலா டா சில்வா தலைமையில் ஆட்சி அமைவதைத் தடுக்கும் வகையில் சதி திட்டம் தீட்டியதாகவும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சி செய்ததாகவும் போல்சனாரோ மீது குற்றம் சாட்டபட்டது.
அர்ஜென்டினாவுக்குத் தப்பியோட முயன்றதாகவும், தனது மகன் எட்வர்டோவுடன் சேர்ந்து நீதிமன்ற விசாரணையில் தலையிட முயன்றதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தந்தையும், மகனும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய நீதிமன்ற அமர்வு போல்சனாரோவை குற்றவாளி என்று அறிவித்துள்ளது. அவருக்கு 27 ஆண்டுகள் 3 மாத சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் போல்சனாரோவை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தனர். வாக்காளர்களின் விருப்பத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு, அரசியலமைப்புக்கு எதிரான வழிகளில் தன்னைத் அதிபராக நிலைநிறுத்த போல்சனாரோ தீவிரமாகச் சதி செய்ததாக நீதிபதிகள் உறுதி படுத்தியுள்ளனர்.
ஜனநாயகச் சட்டத்தின் ஆட்சியை ஒழிக்க முயற்சித்தது, ஆட்சிக் கவிழ்க்க முயற்சி செய்தது, பொது சொத்துக்களை அடுத்து நொறுக்குதல்,பாதுகாக்கப்பட்ட தேசிய பாரம்பரிய இடங்களுக்குச் சேதம் விளைவித்தல், ஆகிய குற்ற சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக, அதிபர் வேட்பாளர் லூலாவையும் அவரது துணை அதிபர் வேட்பாளர் ஜெரால்டோ அல்க்மினையும் படுகொலைச் செய்யவும், தன் மீதான விசாரணையை மேற்பார்வையிட்டு வரும் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸைக் கைது செய்து தூக்கிலிடவும் திட்டமிட்டிருந்த ஒரு சதித்திட்டம் குறித்தும் தங்களுக்குத் தெரியும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐந்து நீதிபதிகளில் இரண்டு பேர் போல்சனாரோவைக் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளித்து இருந்தால் மட்டுமே மேல்முறையீட்டுக்குச் செல்ல முடியும். எனவே, வயதைக் காரணம் காட்டி வீட்டுக்காவலிலேயே சிறைத் தண்டனையை அனுபவிக்க கோரிக்கை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே போல்சனாரோ சிறந்த மனிதர் என்று கூறியுள்ள அதிபர் ட்ரம்ப், இந்தத் தீர்ப்பு தன்னை வருத்தமடைய வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல் குற்றவாளியான பிரேசிலின் உச்ச நீதிமன்ற நீதிபதியும் மற்றும் பிற நீதிபதிகளும் முன்னாள் அதிபர் போல்சனாரோவை சிறையில் அடைக்க அநியாயமாகத் தீர்ப்பளித்துள்ளனர் என்றும், பிரேசிலில் அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கைள் தொடர்கிறது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ இந்தத் தீர்ப்பை கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், பிரேசிலின் இந்தச் சூனிய வேட்டைக்கு, அதற்கேற்ப அமெரிக்கா பதிலளிக்கும் என்று கூறியுள்ளார். ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் ட்ரம்ப், பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.