சேலம் அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டரில் பணம் பெற்றுக் கொண்டு குழந்தையின் பாலினத்தை தெரிவித்த மருத்துவர் மற்றும் இடைத்தரகர் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டரில் பணம் பெற்றுக் கொண்டு குழந்தையின் பாலினத்தை தெரிவிப்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது. அதன்பேரில் அங்கு பணியாற்றும் 3 மருத்துவர்களை மாவட்ட ஆட்சியரகத்துக்கு அழைத்து சென்று சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது ஸ்கேன் சென்டரில் பணியாற்றும் மருத்துவர் தியாகராஜன், இடைத்தரகர் ஸ்ரீராம் மூலம் 12 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கூறியது தெரியவந்தது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை புற காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், மருத்துவர் தியாகராஜன் மற்றும் இடைத்தரகர் ஸ்ரீராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.