மிசோரமில் ஒன்பதாயிரம் கோடிக்கும் அதிகமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்குவங்கம், பிகார் ஆகிய 5 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். மிசோரம் தலைநகர் ஐசோல் சென்ற பிரதமர் மோடி, 9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதிலும் முக்கியமாக மிசோரம் தலைநகரை இந்திய ரயில்வேயுடன் இணைக்கும் பைரபி – சாய்ரங் ரயில் பாதையை காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பைரபி – சாய்ரங் ரயில் பாதை சுமார் 8 ஆயிரத்து 70 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 45 சுரங்கப் பாதைகள் மற்றும் 55 மேம்பாலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 52 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பாதையில் 88 சிறிய பாலங்களும் உள்ளன.
அப்போது பேசிய பிரதமர் மோடி, ஐசோல் இன்று முதல் இந்தியாவின் ரயில்வே வரைபடத்தில் இடம்பெறும் என்றும், நாட்டு மக்களுக்கு இந்த ரயில் பாதையை பெருமையுடன் அர்ப்பணிப்பதாகவும் கூறினார். மேலும், மிசோரமில் உள்ள சாய்ரங் பகுதி, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம், முதல் முறையாக டெல்லியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
சில கட்சிகள் நீண்ட காலமாக வாக்குவங்கி அரசியலை கடைப்பிடித்து வருவதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் எட்டாக்கனியாக இருந்த மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை, ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மலிவு விலையாகி விட்டதாகவும் தெரிவித்தார்.