சென்னைச் சூளைமேடு பகுதியில் மழை நீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
மழைக்காலங்களில் சென்னையின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறிவிடுவது வழக்கம். சாலைகளில் நீர் தேங்கியும், தாழ்வான பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் நீர் புகுந்தும் மக்களைப் படாத பாடு படுத்தி விடும்.
குறிப்பாக, சூளைமேடு பகுதி மழைக் காலங்களில் அதிகப் பாதிப்பை சந்திக்கிறது. இதனைத் தடுக்கும் வகையில், அப்பகுதியில் மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், மந்த கதியால் அப்பணி நடைபெறுவதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சூளைமேட்டில் உள்ள அண்ணா நெடும்பாதை, பஜனைகோயில் தெரு, வடஅகரம் சாலை, பெரியார் பாதை உட்பட பல இடங்களில், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் தொடர்பாக முறையான முன்னறிவிப்புகள் வழங்கப்படுவதில்லை எனவும், அதிகாரிகள் திடீரெனச் சாலையை தோண்டி போட்டுவிட்டுச் சென்றுவிடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பஜனைக் கோயில் தெரு பகுதியில் மழைநீர் வடிகால் பணி தொடங்கப்பட்டது. இதன் காரணமாக அந்தச் சாலை முழுவதுமாக மூடப்பட்டதால், பொதுமக்களும், வாகனஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ஒருகட்டத்தில் மக்களின் கோபம் எல்லையைக் கடக்கவே, அவர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பஜனைக் கோயில் தெருவில் மக்கள் பயணிக்கச் சிறிய வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
மழைநீர் வடிகால் பணியால் அண்ணா நெடும்பாதை ஏற்கனவே சுருங்கிவிட்டது. இந்நிலையில், பிற பகுதிகளில் சாலை அடைக்கப்பட்டதால் அவ்வழியாகச் செல்ல வேண்டிய வாகனங்களும் அண்ணா நெடும்பாதையிலேயே பயணிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் காலை மற்றும் மாலை வேளையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஒருபுறம் தோண்டி போடப்பட்டுள்ள குழிகள் மற்றும் அடைக்கப்பட்ட சாலைகள். மறுபுறம் விழி பிதுங்க வைக்கும் போக்குவரத்து நெரிசல். இதனால், சென்னைச் சூளைமேடு பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இனியும் தாமதிக்காமல் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
			















