நீலகிரி அருகே யானைகள் வழித்தடங்களில் உள்ள தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை 6 மாதங்களில் தொடங்க வேண்டுமெனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் சேகூர் பகுதியை யானைகள் வழித்தடமாக அறிவித்துக் கடந்த 1991ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில் ரிசார்ட் தரப்பு குறைகளை விசாரிப்பதற்காக உச்சநீதிமன்ற ஆணைப்படி ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்தக்குழு யானை வழித்தடத்தில் உள்ள சட்டவிரோதக் கட்டடங்களை இடிக்க வேண்டும் உள்ளிட்ட பல உத்தரவுகளைப் பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ரிசார்ட் உரிமையாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான மனு நீதிபதிகள் சதீஷ்குமார், பரதச் சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குழுவின் உத்தரவுகளை உறுதி செய்வதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், யானை வழித்தடங்களில் உள்ள தனியார் நிலங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற உத்தரவை மட்டும் ஏற்க முடியாது எனக் கூறினர்.
மேலும் யானைகள் வழித்தடங்களில் உள்ள தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகளை 6 மாதங்களில் தொடங்க வேண்டுமெனவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.