இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனை இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், கிழக்கு லடாக்கில் அதிநவீனக் கண்காணிப்புக்கான உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியா வலுப்படுத்தி வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியா மற்றும் சீனா இடையே நீண்ட எல்லைப் பகுதி உள்ளது. எல்லையில் இருக்கும் பல பகுதிகளை இரு நாடுகளுமே தங்கள் பகுதி எனச் சொந்தம் கொண்டாடுகின்றன.
கடல் மட்டத்தில் இருந்து 4,350 மீட்டர் உயரத்தில் உள்ள பாங்காங் ஏரி மற்றும் கல்வான் நதி பாயும் பகுதிகளில் எல்லை இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
கல்வான் பள்ளத்தாக்கில், உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகில் வாழும் பெரும்பாலான நாடோடி மக்களுக்கு கால்நடைகளே வாழ்வாதாரமாக உள்ளது.
பனிப் பாலைவனம் என்று கூறப்படும் லடாக் பகுதியில், சாதாரண நாட்களிலேயே கால்நடைகளை மேய்க்கப் புல்வெளி தேடுவது சிரமம். ஒவ்வொரு ஆண்டும் சீனர்கள் இந்தப் புல்வெளியை கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றி கொண்டே உள்ளனர்.
முன்பெல்லாம் அங்குலம் அங்குலமாக, ஒவ்வொரு அடியாகக் கைப்பற்றிவந்த சீனர்கள்,இப்போது கிலோமீட்டர்க் கணக்கில் கைப்பற்ற தொடங்கியுள்ளனர். தங்கள் கால்நடைகள் மேய்வதற்கான புல்வெளி சுருங்கிக் கொண்டே போகிறது என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகவே குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், எப்போதெல்லாம் இந்தப் பகுதியில் தங்களுக்குப் பிரச்னைப் பதற்றம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்திய ராணுவமே முன்னின்று பாதுகாப்பு தருகிறது என்றும் லடாக் மக்கள் கூறுகின்றனர்.
பொதுவாக இந்திய- திபெத் எல்லைக் காவல் படையினரே ரோந்து பணியில் ஈடு பட்டுவந்தனர். கல்வான் பள்ளத்தாக்கில் 2020-ல் நடந்த மோதலுக்குப் பிறகு இந்திய ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர். ஏற்கெனவே சுமார் 60,000 வீரர்கள் நிறுத்த பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
பழைய ரோந்துப் பணிகளுக்குப் பதிலாக, இந்தியா தனது எல்லையில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் அதிநவீனக் கேமராக்கள், சென்சார்கள் மற்றும் பிற நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த உள்ளது. இது எல்லையில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாகக் கண்காணிக்க உதவும் என்று கூறப்படுகிறது.
உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு (ISR) நெட்வொர்க்கை உருவாக்கக் கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா பல கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. இது ரோந்துப் பணிகளைக் குறிப்பதல்ல என்றும், மாறாக ரோந்துப் பணிகளை ஒருங்கிணைக்கும் என்றும் கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான வீரர்களை எல்லையில் நிறுத்த வேண்டிய தேவைக் குறையும் என்றும், இதனால் தேவையற்ற பதற்றங்கள் மற்றும் தற்செயலான மோதல்கள் தவிர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு இருநாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு எல்லைப் பகுதியில் பெரும்பாலும் அமைதி நிலவுகிறது என்பதை இருநாடுகளும் ஒப்புக்கொள்கின்றன. இதுவரை, இரு நாடுகளும் எல்லைப் பிரச்சினையில் 21 சுற்று படைத் தளபதிகள் மட்ட பேச்சுவார்த்தைகளையும், 34 சுற்று WMCC கூட்டங்களையும், 24 சுற்று சிறப்பு பிரதிநிதிகளின் உரையாடலையும் நடத்தியுள்ளன.
சீனாவுடனான எல்லைப் பிரச்சனையில், ராணுவ மற்றும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், தொழில்நுட்பம் மூலம் பதற்றத்தைக் குறைக்கும் இந்தியாவின் புதிய அணுகுமுறைச் சர்வதேச அரங்கில் கவனத்தைப் பெற்றுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே அமைதியையும், எல்லையில் ஸ்திர தன்மையையும் ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.