பெரம்பலூரில் தவெக தலைவர் விஜயின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றனர்.
கட்சியின் 2ஆவது மாநில மாநாட்டை நடத்தி முடித்துள்ள தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலை சந்திக்கும் வகையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில் முதலாவதாகத் திருச்சி மற்றும் அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் தொண்டர்களின் கூட்டம் காரணமாகத் திட்டமிடப்பட்ட நேரத்தில் கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
மாலை 5 மணிக்குப் பெரம்பலூர் வானொலித் திடலில் பேசுவதற்குக் காவல்துறை அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் அரியலூரில் விஜய் பிரச்சாரத்தை முடித்துவிட்டுப் பெரம்பலூர் வருவதற்கே தாமதம் ஆனது.
வானொலி திடலுக்குச் செல்ல இரவு 12.30 மணிக்கு மேல் ஆனதால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து விஜயின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இந்தச் சூழலில் விஜயைப் பார்ப்பதற்காக சுமார் 7 மணி நேரமாகக் காத்திருந்த தவெகத் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.