இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக Sergio Gor யை நியமித்துள்ள ட்ரம்பின் நடவடிக்கை இந்திய- அமெரிக்க உறவை மேலும் சிக்கலாக்கும் என்று அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் எச்சரித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவில் இரண்டாவது முறை அதிபரான ட்ரம்ப், கிட்டத்தட்ட உலகநாடுகள் அனைத்துக்கும் பரஸ்பர வரி விதித்து, உலகப் பொருளாதாரத்தையே பலவீனப்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுகிறது என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தார் ட்ரம்ப்.
ரஷ்யாவிடம் அதிக எண்ணெயைக் கொள்முதல் செய்யும் சீனா உட்பட பிறநாடுகளை விட்டுவிட்டு, இந்தியா மீது மட்டும் அதிக வரி விதித்த ட்ரம்பின் நடவடிக்கை நியாயமற்றது என்று இந்தியா வன்மையாகக் கண்டித்தது.
சர்வதேச பொருளாதார வல்லுநர்களும் உட்பட அமெரிக்காவின் அரசியல் தலைவர்களும் ட்ரம்பின் நடவடிக்கை அமெரிக்க வெளியுறவுத் துறையின் தோல்வி என்று விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக, Sergio Gor யை ட்ரம்ப் நியமித்துள்ளார். “இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராகும் தகுதி Sergio Gor க்கு இருப்பதாகத் தான் நினைக்கவில்லை எனக் கூறியுள்ள முன்னாள் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இந்த நியமனம் இருநாடுகளின் உறவில் மேலும் விரிசலை உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
பல ஆண்டுகளாக இந்தியாவுடன் அமெரிக்கா ஏற்படுத்தி வைத்திருந்த நல்லுறவை ட்ரம்ப் சிதைத்துவிட்டதாக குற்றம்சாட்டிய ஜான் போல்டன், இந்தியாவை ரஷ்யாவுடனும், சீனாவுடனும் நெருக்கமான உறவை ஏற்படுத்த ட்ரம்ப் வழிவகைச் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
சர்வதேச உறவுகளை, தலைவர்களுடனான தனது தனிப்பட்ட உறவுகளின் கண்ணோட்டத்தில் ட்ரம்ப் பார்க்கிறார். உதாரணமாக, புதினுடன் நல்ல உறவு இருந்தால், ரஷ்யாவுக்கு அமெரிக்காவுடன் நல்ல உறவு இருக்கும் என்று ட்ரம்ப் நம்புகிறார்.
இந்திய- அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டைப் பாராட்டியுள்ள ஜான் போல்டன், அமெரிக்காவுடனான உறவுகளைத் தேசிய நலனின் அடிப்படையில் இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும் கோடிட்டுக் கட்டியுள்ளார்.
மேலும், ட்ரம்ப்பிடம் ஒரு ஒத்திசைவான தேசிய பாதுகாப்பு உத்தி இல்லாதது குறித்து கவலைத் தெரிவித்துள்ள ஜான் போல்டன், சுயலாப கணக்கில் திடீர்த் திடீர் என்று ட்ரம்ப் முடிவெடுப்பதே இந்தியா-அமெரிக்க உறவுகளில் உள்ள அழுத்தங்களுக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கூடுதலாக, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்தியாவின் “பிராமணர்கள்” மட்டுமே லாபம் ஈட்டுவதாகக் குற்றம்சாட்டிய ட்ரம்பின் முன்னாள் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோவையும் போல்டன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ள ஜான் போல்டன், இந்தியாவுடன் சுமூக உறவைப் பேணுவதே அமெரிக்காவின் நலனுக்கு நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புவிசார் அரசியலில் மையமாக இந்தியா உள்ளது என்பதை சர்வதேச நாடுகள் உணரத் தொடங்கிவிட்டன என்ற அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.