எடப்பாடி காவல் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை செய்த விவகாரத்தில் திமுக கவுன்சிலரின் மகன் உட்பட 5 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி காவல் நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதியில் சிலர் போதை மாத்திரை மற்றும் ஊசிகளை பயன்படுத்துவதாகவும், போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருப்பதாகவும் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, விடுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது ஒரு அறையில் பதுக்கி வைத்திருந்த போதை மாத்திரை மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர்.
அறையில் தங்கியிருந்த 5 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அறையில் தங்கியிருந்த 5 பேரில் ஒருவர் எடப்பாடி நகராட்சி 3வது வார்டு திமுக கவுன்சிலர் பிச்சமுத்துவின் மகன் சுரேஷ்குமார் எனத் தெரியவந்தது.
மேலும், போதை மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலைக்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.