பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஒன்றரை லட்சம் பேர் நடத்திய பிரமாண்ட பேரணியால் லண்டன் மாநகரமே அதிர்ந்து போனது. வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராக எதற்கு எதிர்ப்பு கிளம்புகிறது? விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
வெளிநாடுகளில் இருந்து இடம்பெயர்ந்த குடியேறிகளால் ஐரோப்பா முழுவதும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகப் பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக, இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிர்ப்பு வலுவாக உள்ளது. அந்த வகையில், தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ராபின்சன் தலைமையில் நடைபெற்ற பேரணியால் லண்டன் மாநகரமே குலுங்கியது.
லண்டன் நகரின் தேம்ஸ் நதிக்கரையை ஒட்டிய பிக் பென் பகுதி முதல் வாட்டர்லூ பகுதி வரை நடைபெற்ற மாபெரும் பேரணியில், சுமார் ஒன்றரை லட்சம் பேர்க் கலந்து கொள்ளத் திரும்பும் திசையெல்லாம் மனிதத் தலைகளாக காணப்பட்டன.
வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராகவும், தேசத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் பேரணியில் பங்கேற்றவர்கள் முழக்கமிட அசாதரண சூழல் காணப்பட்டது.
டாமி ராபின்சனின் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பாசிசத்துக்கு எதிரான பேரணி என்ற பெயரில் இனவெறிக்கு எதிரானவர்கள் போராட்டத்தை முன்னெடுக்க, அது போலீசாருக்குப் பெரும் தலைவலியாக மாறியது. எங்கள் நாட்டில் வந்து எங்களுக்கு எதிராகவே பேரணியா? என டாமி ராபின்சன் ஆதரவாளர்கள் கொந்தளிக்க நிலைமை கை மீறி போனது. ஒரு கட்டத்தில் டாமி ராபின்சன் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்களை நெருங்கி விட, அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர்.
ஆனால் கோபத்தின் உச்சியில் இருந்த வலதுசாரி ஆதரவாளர்கள் போலீசார் மீதே தாக்குதல் நடத்த கலவரம் வெடித்தது. டாமி ராபின்சன் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 26 பேர் காயமடைந்துவிட, அமைதிக்குக் குந்தகம் விளைவித்தாக 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே போராட்டக்காரர்களுடன் ஆன்லைனில் பேசிய எலான் மஸ்க், பிரிட்டன் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும், புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனப் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கட்டுப்பாடற்ற புலம்பெயர்வு பிரிட்டனை அழித்துவிடும் என எலான் மஸ்க் எச்சரிக்க, விவகாரம் பூதாகரமாகி உள்ளது.
சமீப காலமாகவே, உலக நாடுகளில், ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தி, ஆட்சி மாற்றம் ஆகியவைத் தொடர் கதையாகி உள்ளன. சமீபத்தில், GEN-Z இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் நேபாளத்தில் சர்மா ஒலி அரசாங்கம் கவிழ்ந்தது. அதே போன்றதொரு எழுச்சி போராட்டம் பிரிட்டனிலும் கிளம்பி இருக்க, பிரச்னையை அந்நாட்டு அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.