ஒப்பந்த செவிலியர்களை, தமிழக அரசு அளவுக்கு அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்வதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒப்பந்த செவிலியர்களுக்கு, நிரந்தரச் செவிலியர்களுக்கு இணையாகத் தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதன் விசாரணையில், ஒப்பந்த செவிலியர்களை மிகக் குறைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்தி, அவர்களைத் தமிழ்நாடு அரசு சுரண்டுவதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
ஒப்பந்த செவிலியர்களை, நிரந்தரச் செவிலியர்களாக நியமிக்கவும், உரிய ஊதியமும் கொடுக்கத் தமிழக அரசு மறுப்பதாகவும் நீதிபதி வேதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆஜரான தமிழக அரசு தரப்பு மத்திய அரசிடம் இருந்து உரிய பணம் கிடைக்காததால் ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள் என அறிவுறுத்தினார்.
இலவசங்களுக்குக் கொடுக்க பணம் உள்ளது, ஆனால் பணியாளர்களுக்கு கொடுக்கப் பணம் இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.
நாட்டிலேயே சிறந்த மாநிலம் என்று கூறும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை ஏன் இப்படி இருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கு தொடர்பாக நான்கு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.