உலகின் பழமையான 3D வரைபடத்தைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்…
அடிலெய்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 13 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 3டி வரைப்படத்தைச் சமீபத்தில் கண்டறிய, அது தொல்லியல் துறையினர் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
புகழ்பெற்ற செகோக்னோல் பாறைகளுக்குள் அமைந்துள்ள இந்த 3டி புகைப்படம் பாரிஸ் படுகையைக் குறிப்பதாக அமைந்துள்ளது. தங்களது அன்றாட வாழ்க்கைக்கு நீரோட்டத்தின் திசை முக்கியம் எனக் கருதிய கற்கால மக்கள் , 3டி வரைபடத்தை உருவாக்கி இருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
செகோக்னோல் பாறைகளுக்குள் அமைந்துள்ள இந்த 3டி வரைபடம், பாலியோலிதிக் ஸ்டைலில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாலியோலிதிக் மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக இந்த வரைபடம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் பொறியியல் திறன் படைத்தவர்களாக வாழ்ந்துள்ளனர் என்றும் அவர்கள் அடித்து கூறுகின்றனர். இன்றைய காலத்து 3டி மேப்கள் போல், தத்ரூபமான தகவல்கள் இடம்பெறாவிட்டாலும், நீரோட்டம் எங்கிருந்து தொடங்குகிறது, எங்கு சேர்கிறது என்பது உள்ளிட்ட விவரங்கள் பண்டைகால வரைபடத்தில் இடம்பெற்றுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாலியோலிதிக் மக்கள் நேரம், தூரம் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளாமல், திசைகளை அடிப்படையாகக் கொண்டு தங்களது வாழ்வியலை முன்னெடுத்துள்ளனர் என்றும் கருத்து கூறுகின்றனர்.
இதற்கு முன்னர் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 3டி வரைபடமே பழமை வாய்ந்ததாகக் கருதப்பட்டது. BRONZE AGE எனப்படும் உலோகக் காலத்தில் இருந்தே 3டி கான்செப்ட் தோன்றியதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அடிலெய்டு பல்கலை ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு, அதனைச் சுக்கு நூறாக உடைத்துள்ளது.
கற்கால மக்களும் முப்பரிமாணம் குறித்து அறிந்து வைத்தது உறுதியாகி உள்ளதால், தொல்லியல் துறையினருக்கு அது மேலும் ஆர்வமூட்டும் செய்தியாக அமைந்துள்ளது. உலோகக் காலங்களில் மக்களின் வாழ்வியல் குறித்து ஆராயப்படுவது நிறுத்தப்பட்டுக் கற்கால மக்களை நோக்கி தொல்லியல் ஆராய்ச்சியாளர்களை நகர்த்தியுள்ளது.