இந்தியா – அமெரிக்கா இடையே தடைபட்டுள்ள வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைச் செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெறுகிறது.
இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஐந்து சுற்றுக்கள் இந்தப் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், விவசாயம் மற்றும் பால்பண்ணைத் துறையில் இந்திய சந்தையைத் திறந்துவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது.
இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதன் காரணமாக வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைத் தடைபட்டது. இதனிடையே இரு நாடுகளுக்கு இடையேிலான வர்த்தகத் தடைகளை தீர்க்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என டிரம்ப் கூறியிருந்தார்.
இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை செவ்வாய் கிழமை நடைபெறுகிறது. அமெரிக்க அரசு சார்பில் மத்திய மற்றும் தெற்கு ஆசியாவுக்கான பிரதிநிதி பிரெண்டன் லின்ச் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.