வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய மேலும் ஒருநாள் கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருமான வரி கணக்கை இன்றும் தாக்கல் செய்ய முடியும்.
2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. கடந்து சில தினங்களாகப் பலரும் அவசர அவசரமாக வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ததால், அவ்வப்போது வருமான வரி இணையதளம் சரியாகச் செயல்படாமல் மெதுவாக இயங்கியது.
இதனால், வருமான வரி தாக்கல் செய்வோர் கடும் சிரமத்தைச் சந்தித்தனர். இந்த நிலையில், நேற்று இணையதளம் திடீரென முடங்கியதால் பலரும் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்தக் கோரிக்கையை ஏற்று, வருமான வரித்துறை ஒருநாள் கால அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்ததாகவும், பின்னர் இது செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது 2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.