ஃபிடே மகளிர்க் கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி சாம்பியன் பட்டம் அசத்தி உள்ளார்.
ஃபிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது. இப்போட்டி 11 சுற்றுகளுடன் ஓபன் மற்றும் மகளிர் பிரிவாக நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அடுத்த ஆண்டு நடைபெறும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்குத் தகுதி பெறுவர்.
இந்நிலையில் மகளிர் பிரிவின் கடைசி சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த கேத்ரினா லாங்காவை தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து 11 சுற்றுகள் கொண்ட தொடரில் 6 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்ற தமிழக வீராங்கனை வைஷாலி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
5 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்ற கேத்ரினா லாங்கா 2வது இடம்பிடித்தார். இதன்மூலம் தொடர்ந்து 2வது முறையாகக் கிராண்ட் சுவிஸ் பட்டம் வென்று அசத்தி உள்ள வைஷாலி, 2026 உலகச் சாம்பியன்ஷிப் கேண்டிடேட் செஸ் தொடருக்கும் தகுதி பெற்றுள்ளார்.