பாலாறு மாசு குறித்து ஆய்வு செய்யச் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலாற்றில் கழிவுகளை வெளியேற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை மூட உத்தரவிடக் கோரி, வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலாறு மாசு குறித்து ஆய்வு செய்ய 2 ஐஐடி நிபுணர்கள், சுற்றுச்சூழல் அறிஞர் நாகராஜன் உள்ளிட்டோர் அடங்கிய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்தக் குழு 6 மாதத்தில் சுற்றுசூழல் மதிப்பீடு செய்து அறிக்கைத் தயாரிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அதனைப் பார்த்த பின்னரே அடுத்த ஆய்வை எவ்வளவு கால இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும் என முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது.
இதனைக் கேட்ட மனுதாரர் தரப்பு, ஆய்வு செய்த அனைத்துத் தரவுகளையும் இணையத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.
அதற்குப் பதிலளித்த தமிழக அரசு, ஒவ்வொரு முறையும் முழு தரவுகளையும் இணையத்தில் பதிவேற்றுவது இயலாத காரியம் எனவும், நடைமுறைச் சிக்கல்கள் பல உள்ளதாகவும் தெரிவித்தது.
இதனைக் கேட்ட உச்சநீதிமன்றம், மாசு விவகாரம் தொடர்பாக ஏதேனும் தரவுகள் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.