ஊழியரை நாய் எனத் திட்டிய பாவத்திற்காக 90 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியிருக்கிறது ஜப்பான் நாட்டின் அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி நிறுவனம்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டி.யு.பி என்ற அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் சடோமி என்ற இளம் பெண் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் முன் அனுமதி இன்றி வாடிக்கையாளரை சந்தித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் மிட்சுரு சகாய், சடோமியை கண்டித்துள்ளார். அப்போது சடோமியை நாய் எனத் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து போன சடோமி தற்கொலைச் செய்துகொண்டார்.
இதனையடுத்து, டோக்கியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவரது பெற்றோர், தங்கள் மகளின் இறப்பிற்கு டியுபி நிறுவனமும், அதன் தலைவர் மிட்சுரு சகாயும் தான் காரணம் எனக் குற்றம் சாட்டினார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சடோமியின் குடும்பத்துக்கு ஜப்பான் நாட்டு பணமான 150 மில்லியன் யென், அதாவது இந்திய மதிப்பில் 90 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.
மேலும் அதன் தலைவரான மிட்சுரு சகாய் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டனர்.
இதனையடுத்துச் சடோமியின் குடும்பத்துக்கு 90 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ள நிறுவனம், மகளை இழந்து வாடும் குடும்பத்தினரிடம் மன்னிப்பும் கோரியுள்ளது.